Ad Banner
 

பி.ஏ.பி உதவித் தொகை இவ்வார இறுதிக்குள் நிறைவடையலாம்

11/01/2026 03:27 PM

கோலா திரெங்கானு, 11 ஜனவரி (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கும் 150 ரிங்கிட் பி.ஏ.பி எனப்படும் பள்ளி தவணைக்கான தொடக்கக் கட்ட உதவித் தொகையின் விநியோகம், இவ்வார இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த ஒதுக்கீடு தற்போது பள்ளி மட்டத்தில் இருப்பதோடு, விநியோக செயல்முறைக்குக் காத்திருப்பதாக பள்ளி செயல்பாட்டு துறைக்கான கல்வி துணை இயக்குநர் ஸைனால் அபாஸ் கூறினார்.

பி.ஏ.பி-க்கான நிதி ஒதுக்கீடு வங்கி கணக்கின் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதனை இன்று அல்லது நாளை தொடங்கி பெற்றோர்களுக்கு வழங்க தொடங்கலாம் என்று ஸைனால் அபாஸ் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாடுகளைப் பொறுத்தே பெற்றோர்களுக்கான உதவித்தொகை விநியோக செயல்முறை மேற்கொள்ளபடும் என்றும், இவ்வார இறுதிக்குள் அதனை முழுமையாக நிறைவேற்ற இலக்குக் கொண்டிருப்பதாகவும், அவர் கூறினார்.

இன்று, புதிய தவணை தொடக்கத்தை முன்னிட்டு, கோலா திரெங்கானுவில் உள்ள கோங் தோக் நசேக் தேசிய பள்ளியைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், ஆரம்பப் பள்ளி தொடங்கி ஆறாம் படிவ மாணவர்கள் வரை வழங்கப்படும் பி.ஏ.பி உதவித் தொகைக்காக, இவ்வாண்டு அரசாங்கம் 80 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளதாக, கடந்த திங்கட்கிழமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அதன் மூலம், 52 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நிதி அமைச்சருமான அவர் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)