கினாபாதாஙான், ஜனவரி 10 (பெர்னாமா) -- வரும் 24ஆம் தேதி நடைபெறும் கினாபாதாஙான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி, வாரிசான் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணி சார்பில் கினாபாதாஙான் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் முஹமட் குர்னியாவான் நயிம் மொக்தார் போட்டியிடும் வேளையில்...
வாரிசானை பிரதிநிதித்து சுகாவ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ சாடி அப்துல் ரஹ்மான் மற்றும் சுயேட்சை வேட்பாளராக கோல்டம் எச்.சலங்கா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஶ்ரீ லாமாக் மண்டபத்தில் இன்று காலை மணி 10 அளவில் வேட்புமனு தாக்கல் செயல்முறை நிறைவடைந்த போது அம்மூவரும் போட்டியிட தகுதியானவர்கள் என்று தேர்தல் நிர்வாக அதிகாரி டாக்டர் ஏடி ஷாய்சுல் ரிசாம் அப்துல்லா அறிவித்தார்.
"நான் வேட்புமனுகளை மதிப்பாய்வு செய்தேன். அவற்றை மதிப்பாய்வு செய்த பிறகு யாருடைய வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்பதில் நான் திருப்தி அடைகிறேன்," என்றார் அவர்.
காலை மணி 9.06-க்கு முஹமட் குர்னியாவான் நயிம் மொக்தாரும், 9.18 மணிக்கு த்தோ சாடி அப்துல் ரஹ்மானும் 9.31 மணிக்கு கோல்டம் எச்.சலங்காவும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதை தொடர்ந்து, கினாபாதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)