Ad Banner
 பொது

இருதரப்பு உறவுகளை HLSCC நிலைக்கு உயர்த்த மலேசியா & துருக்கி இணக்கம்

08/01/2026 04:15 PM

அன்காரா, 08 ஜனவரி (பெர்னாமா) -- இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை உயர்மட்ட வியூக ஒத்துழைப்பு மன்றம், HLSCC நிலைக்கு உயர்த்த மலேசியாவும் துருக்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் சவாலான சூழலில், வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதே இம்முயற்சியின் நோக்கம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன், பாரம்பரிய வர்த்தகத்தைக் கடந்து தொழில்நுட்பம், தற்காப்பு, கல்வி, ஆய்வு மற்றும் இஸ்லாமிய நிதி உள்ளிட்ட புதிய துறைகளுக்கு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும் இம்முடிவு  குறிப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

''எனவே, எங்கள் ஒத்துழைப்பை உயர் மட்ட வியூக ஒத்துழைப்பு மன்றமாக மேம்படுத்த ஒப்புக்கொண்டதற்கு மலேசியாவின் சார்பாக நன்றி. இது அரிதானது என்பதை நான் கூற வேண்டும். இதுபோன்ற ஒத்துழைப்பு பல நாடுகளில் இல்லை. நம்பிக்கை, அன்பு மற்றும் உங்கள் திறமையின் மீதான நம்பிக்கை மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். துருக்கிய மக்களின் வலிமை மற்றும் திறன், தொழில், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை உங்கள் சொந்த திறமையை உலகிற்கு முன்னோக்கி செலுத்தி வெளிப்படுத்த முடியும்,'' என்றார் அவர். 

இரு நாடுகளும் தங்கள் உறுதிமொழிகளை உறுதியான முடிவுகளாக உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய  அன்வார், அதிகரித்து வரும் போட்டி மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் அதிகாரத்துவ செயல்முறைகள் இனி போதுமானதாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]