பிரேசில், ஜனவரி 7 (பெர்னாமா) -- பிரேசிலின் சாண்டோஸ் கிளப்புடனான தனது ஒப்பந்தத்தை 2026 இறுதி வரை நீட்டிக்க அதன் தாக்குதல் ஆட்டக்காரர் நெய்மார் ஒப்புக்கொண்டுள்ளார்.
அண்மையில் ஆட்டங்களில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்ட போதிலும் உலகக் கிண்ண போட்டியில் தாம் களமிறங்கக் கூடும் என்றும் அவர் நம்பிக்கைக் கொண்டுள்ளார். 33 வயதான நெய்மார் 2025 ஜனவரியில் தனது பழைய கிளப்பான சாண்டோஸ்-க்கு மீண்டும் திரும்பினார்.
ஐந்து இறுதி போட்டிகளில் ஐந்து கோல்களை அடித்து பிரேசிலின் முதன்மை லீக்கில் சாண்டோஸ் கிளப்பை தக்கவைத்துக்கொள்ள அவர் முக்கிய பங்கு வகித்தார். அடிக்கடி காயங்களால் அவதிப்படும் நெய்மார் கடந்த மாதம் தனது முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.
பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் முன்னாள் நட்சத்திரமான நெய்மார் 79 கோல்களுடன் பிரேசிலின் அதிக கோல் அடித்த வீரராக உள்ளார். 2023-க்குப் பிறகு தேசிய அணியான பிரேசிலுக்கு அவர் இன்னும் விளையாடவில்லை.
இவ்வாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்காட்லாந்து, மொரோக்கோ மற்றும் ஹெய்தி அணிகளோடு பிரேசில் C குழுவில் விளையாடும்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)