புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 07 (பெர்னாமா) -- மருத்துவர் ஒருவருக்கு காயம் விளைவித்ததாக இன்று புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 32 வயதுடைய உணவக உரிமையாளர் மறுத்து விசாரணைக் கோரினார்.
கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி இரவு மணி 11.30-க்கு செபெராங் பிறை தெங்காவில் உள்ள பிறை டோல் சாவடியில் எல்.அவினாஷ் என்பவரை வேண்டுமென்றே காரில் மோதி காயப்படுத்தியதாக கோர் வெய் இயேக் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி இல்லையேல் இவற்றில் ஏதாவது இரு தண்டனைகளை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 324-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை, ஐந்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா முஹமட் அகிட் அனுமதி அளித்தார்
மேலும், ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இவ்வழக்கின் மறு செவிமடுப்பு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் வகையிலான மறைக்காணி காணொளி பரவலாக பகிரப்பட்டத்தைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட ஆடவரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)