கோலாலம்பூர், ஜனவரி 7 (பெர்னாமா) -- அண்மையில் இராணுவ முகாம் ஒன்றில் தொடர்பில்லாத நபர்கள் நுழைந்தது மற்றும் ஒழுக்கக்கேடான செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய எந்தவொரு தவறான நடத்தை அல்லது ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளில் அரச மலேசிய ஆகாயப்படை தி.யு.டி.எம் சமரசம் கொள்ளாது.
இதன் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் வேளையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணிநீக்கம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆகாயப்படை தளபதி ஜெனரல் டத்தோ ஸ்ரீ முஹமட் நோரஸ்லான் அரிஸ் தெரிவித்தார்.
தி.யு.டி.எம்-இன் நற்பெயர் கண்ணியம் மற்றும் தொழில்முறையைப் பாதுகாக்க விதிமுறைகள் மற்றும் சேவையின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜெனரல் டத்தோ ஸ்ரீ முஹமட் நோரஸ்லான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
தி.யு.டி.எம்-இன் நற்பெயரையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் அத்தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவோர் ஒழுக்கக்கேடான செயலும் நிச்சயம் தடைக்கு உட்பட்டது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிகாரிகளையும் உறுப்பினர்களையும் உட்படுத்திய ஒழுக்கம் மற்றும் நேர்மை தொடர்பான ஒவ்வொரு பிரச்சினையையும் தங்கள் தரப்பு தீவிரமாகக் கருதுவதை முஹமட் நோரஸ்லான் சுட்டிக்காட்டினார்.
தொடர்பில்லாத நபர்கள் இராணுவ முகாம்களுக்குள் நுழைந்ததோடு ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து உள் விசாரணை நடத்துமாறு தற்காப்பு அமைச்சு கடந்த திங்கட்கிழமை மலேசிய ராணுவப்படைக்கு உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)