நேபாளம், ஜனவரி 7 (பெர்னாமா) -- தெற்கு நேபாளத்தின் பிர்கஞ்ச் நகரில் வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
அங்குள்ள ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியதால் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பர்சா மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த முழு ஊரடங்கு உத்தரவின் வழி அனைத்து போராட்டங்களும் கூட்டங்களும் தடை செய்ய்யப்பட்டன. அதோடு யாரும் வீதிகளுக்கு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.
இந்த உத்தரவை மீறுபவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுடப்படலாம் என்றும் அந்த அறிவிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிர்கஞ்ச் நகர வீதிகளில் ஆயுதமேந்திய வீரர்களும் போலீஸ் அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பிர்கஞ்ச் நகரத்தில் ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தத் தொடங்கின. அதே நாளில் இந்து ஆதரவாளர்களால் தனி ஆர்ப்பாட்டம் நடத்தியதிலிருந்து போராட்டங்கள் தொடர்கின்றன.
இரு குழுக்களுக்கும் இடையில் பெரிய மோதல்களோ அல்லது காயங்களோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கலகத் தடுப்பு போலீசாருடன் மட்டுமே கைகலப்புகள் பதிவாகியுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)