கோலாலம்பூர், 06 ஜனவரி (பெர்னாமா) -- புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல முக்கியமான நற்செய்திகளை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருந்தார்.
அதில் ஒன்றாக, இவ்வாண்டு தொடங்கி நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஐந்து கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
பிரதமரின் அந்த அறிவிப்பு கல்வித் துறையில் சமத்துவத்தை உறுதிச் செய்யும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக கூறுகின்றார் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் வெற்றிவேலன் மகாலிங்கம்.
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கட்டிடங்கள், பள்ளி வளாகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த அந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில், குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் பள்ளிகளை இடமாற்றம் செய்ய அந்நிதியை பயன்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று வெற்றிவேலன் மகாலிங்கம் தெரிவித்தார்.
''நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, மாணவர்களின் எண்ணிக்கை. இதற்கு அரசாங்கம் உடனடியாக குறைந்தது ஐந்து தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு கூடுதலாக, 10 கோடி ரிங்கிட் செலவாகும். நிலம் வாங்குதல், கட்டிடத்தைக் கட்டுதல் போன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கு, பிரதமர் 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்தால் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்,'' என வெற்றிவேலன் மகாலிங்கம் கூறினார்.
கடந்தாண்டு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, அரசாங்கம் 3 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியிருந்த நிலையில், இவ்வாண்டு கூடுதலாக 2 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மனநிறைவை அளிப்பதாக அவர் கூறினார்.
மேலும், இனிவரும் காலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தமது சங்கம் தயாராக இருப்பதாகவும் வெற்றிவேலன் உறுதியளித்தார்.
இவ்வாண்டு நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஐந்து கோடி ரிங்கிட்டும், சீனப்பள்ளிகளுக்கு எட்டு கோடி ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்வதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)