அலோர் காஜா, ஜனவரி 03 (பெர்னாமா) -- அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழுள்ள பல ஆரம்பப் பள்ளிகளில் இலக்கவியல் கல்வியை மேம்படுத்துவதற்கும் தொடக்கக்கட்ட வெளிப்பாட்டை ஊக்குவிப்பதற்கும் 'பசுமை ஆய்வகங்கள்' அமைக்கப்படும்.
அத்தகைய ஆய்வகத்தின் மூலம் மாணவர்களுக்குத் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் வன்பொருள் குறித்த தெளிவு வழங்கப்படும் என்று அலோர் காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் தற்காப்பு துணை அமைச்சருமான அட்லி சஹாரி தெரிவித்தார்.
'' 'பசுமை ஆய்வகம்' மூலம் அவர்களின் படைப்பைக் காணொளி வடிவில் உருவாக்க முடியும். இதனால் அத்திறனில் ஆளுமை பெற்றவர்களாக அவர்களால் திகழ முடியும். அதேவேளையில், இலக்கவியல் உலகம் என்றால் என்ன அதை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பது முக்கியமான ஒன்று. மேலும் மோசடிகள் மற்றும் அது உள்ளிட்ட சிக்கல்களைத் தடுக்கவும் இலக்கவியல் அறிவு மாணவர்களுக்குத் துணை புரியும் '', என்றார் அட்லி சஹாரி.
இன்று புலாவ் செபாங்கில் உள்ள பேரங்காடியில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ''Jom Shopping Barangan Sekolah'' நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அட்லி சஹாரி இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 500 மாணவர்களும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் சம்பந்தப்பட்ட பேரங்காடியில் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு நூறு ரிங்கிட்டிற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)