சிலாங்கூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- பல ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் அடையாள அட்டையைப் பெற்றும் ஏழு சகோதரர்களின் எண்ணம் ஈடேறியது.
17 முதல் 30 வயதுக்கு உட்பட்ட அந்த ஏழுவரின் எதிர்பார்ப்பை தேசிய பதிவுத் துறை ஜே.பி.என் MyKad அடையாள அட்டைகளை இன்று வழங்கி நிறைவேற்றியது.
தேசிய பதிவுத் துறை தலைமை இயக்குநர் பட்ரூல் ஹிஷாம் அலியாஸ் அந்த அட்டைகளை அவர்களிம் ஒப்படைத்தார்.
இந்த ஏழு உடன்பிறப்புகளின் பிறப்பு பத்திரத்தின் தாமதப் பதிவுக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி ஒப்புதல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி அடையாள அட்டையின் தாமதப் பதிவிற்கான விண்ணப்பத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக பட்ரூல் ஹிஷாம் தெரிவித்தார்.
பெற்றோரின் திருமணம் பதிவு செய்யப்படாததே இந்தத் தாமதத்திற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.
''இந்த வழக்கில் முக்கிய பிரச்சனையாக இருந்தது பதிவு செய்யப்படாத திருமணம்தான். தந்தை இறந்த பின்னர், இவ்விவகாரம் சிக்கலானது. குழந்தைகளுக்கான DNA தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல், தந்தைக்கு மிக நெருக்கமான உறவினர்களிடம் அதாவது தந்தையின் சகோதரர் போன்றவர்களிடம் ஆதாரங்களைப் பெர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவே எங்களுடைய நடைமுறை.'' என்றார் பட்ரூல் ஹிஷாம் அலியாஸ்
2023-ஆம் ஆண்டு பெறப்பட்ட இந்த வழக்கைத் தீர்ப்பதற்காக அவர்களின் பெற்றோரின் திருமணம் ஹுலு லங்காட் மாவட்ட இஸ்லாம் மத அலுவலகத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்தத் திருமண உறவு செல்லுபடியாகும் என்று ஷாரியா நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
அனைத்து மலேசிய பிரஜைகளும் தங்களின் திருமணங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்திருக்க வேண்டும் என்று பட்ரூல் ஹிஷாம் வலியுறுத்தினார்.
இது வெறும் நிர்வாகத் தேவையாக மட்டுமல்ல, எதிர்காலத்தில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படை பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)