வங்காளதேசம், ஜனவரி 02 (பெர்னாமா) -- ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட வங்காளதேச இஸ்லாமியக் கட்சி எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அதன் வலுவான தேர்தல் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது.
அதோடு ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அதன் தலைவர் ஷஃபிகூர் ரஹ்மான் தெரிவித்தார்.
17 கோடியே 50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட வங்காளதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கடந்த 17 ஆண்டுகளில் போட்டியிடவிருக்கும் முதல் தேர்தலில் வங்காளதேச தேசியவாதக் கட்சி பி.என்.பி.-க்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இறுதியாக 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கு இடையில் பி.என்.பி.-உடன் இளைய கூட்டணி பங்காளியாக ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி குறிப்பிட்டுள்ளது.
எந்தவோர் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் ஊழல் எதிர்ப்பு என்பது ஓர் ஒன்றிணைந்த கடப்பாடாக இருக்க வேண்டும் என்று ரஹ்மான் கூறினார்.
இதனிடையே பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் கட்சியில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
ஜமாத்-இ-இஸ்லாமி அதிக இடங்களை வென்றால் அவரே வேட்பாளராக இருப்பாரா என்பதை கட்சி முடிவு செய்யும் என்று ரஹ்மான் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)