Ad Banner
 

ஆயுதமேந்தி கலவரத்தை நடத்தி குற்றத்தை மறுத்த அறுவர்

02/01/2026 04:36 PM

ஜோகூர் பாரு, ஜனவரி 02 (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பர் 27-ஆம் தேதி, ஜோகூர், தாமான் மொன்ட் ஆஸ்டின்-டினில், ஆயுதமேந்தி கலவரத்தை ஏற்படுத்தி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை, அறுவர் இன்று ஜோகூர் பாரு மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினர்.

நீதிபதி டத்தோ அஹ்மட் கமால் அரிஃபின் இஸ்மாயில் மற்றும்  மஜிஸ்திரெட் முஹமட் ஃபித்ரி மொக்தார் முன்னிலையில் ஒரே நேரத்தில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், சோய் சூன் ச்சே, சோ தோ சியாங், சோ சே ஷின், டான் ஷென் கி, யாப் சீ ஹோங் மற்றும் கெல்வின் புவா கிம் ஹாவ் ஆகியோர் அதை மறுத்தனர்.

சம்பவத்தன்று பிற்பகல் மணி 3.30-க்கு ஜலான் முதியாரா எமாஸ் 2A-வில் உள்ள ஓர் உணவத்தின் முன்புறத்தில் இறைச்சி வெட்டும் கத்தி, தசெர் துப்பாக்கி, நெகிழி நாற்காலி, இரும்புக் கம்பி ஆகியவற்றைப் பயன்படுத்தி லோ சூன் யோங் என்பவரைத் தாக்கியதாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 326 மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

தலா பத்தாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கலவரத்தில் ஈடுபட்டதோடு, கத்தி மற்றும் பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதற்காக நெகிழி நாற்காலிகளை வைத்திருந்ததாகவும் மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 148-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

தலா 3,500 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் இரு தனிநபர்களின் உத்தரவாதத்தின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரு நீதிமன்றங்களுக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பொருட்டு, வழக்கின் மறுசெவிமடுப்பு பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)