கோலாலம்பூர், ஜனவரி 01 (பெர்னாமா) -- கோலாலம்பூர், பெவிலியனில் நேற்றிரவு 2026ஆம் ஆண்டை வரவேற்கும் கோலாகல கொண்டாட்டத்தின் போது அதனுடன் 2026 மலேசியாவிற்கு வருகைபுரியும் ஆண்டு VM2026க்கான பிரச்சாரமும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
மலேசியாவை உலகின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றும் நோக்கத்திற்கு ஏற்ப நான்கு கோடியே 30 லட்சம் அனைத்துலக சுற்றுப்பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டுள்ள சுற்றுலாத் துறையின் உத்வேக தொடக்கத்தைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்ட இவ்விழா காட்டுகிறது.
சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு, MOTAC, The Fame Events நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழாவில் pyromusical வகை இசை கலந்த வாணவேடிக்கைகள் laser ஒளி காட்சி 3D தொழில்நுட்ப காட்சித் தொகுப்புடன் 2026ஆம் ஆண்டு வெகுவிமரிசையாக வரவேற்கப்பட்டது.
அனைத்துலக தரம் வாய்ந்த சுற்றுலா தளமாக மலேசியாவின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டும் VM2026க்கான சூரிய கரடி சின்னங்களான வீரா மற்றும் மஞ்சாவின் உருவ கொண்டாட்டமும் இவ்விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.
MOTAC அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் மற்றும் சபா, சரவாக் விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் ஆகியோரும் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனிடையே VM2026க்கான தொடக்கமாகவும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுப்யணிகளை இந்நாட்டிற்கு வரவேற்கும் வகையிலும் நள்ளிரவின் கொண்டாட்டம் அமைந்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தியோங் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)