Ad Banner
Ad Banner
 பொது

தமது மாதாந்திர ஊதியத்திலிருந்து மூவாயிரம் ரிங்கிட் குறைப்பு - பெர்லிஸ் மந்திரி புசார்

29/12/2025 05:53 PM

பெர்லிஸ், டிசம்பர் 29 (பெர்னாமா) -- மாநில அரசாங்கத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் முயற்சியாக மாதந்தோறும் தமது ஊதியத்திலிருந்து மூவாயிரம் ரிங்கிட்டை குறைக்கவிருப்பதாக புதிய பெர்லிஸ் மந்திரி புசார் அபு பக்கார் ஹம்சா அறிவித்திருக்கின்றார்.

மாநில அரசாங்கத்தின் தலைமைத்துவ மாற்றத்தில் நியமிக்கப்படவிருக்கும் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் ஊதியத்திலிருந்தும் மாதத்திற்கு 1,500 ரிங்கிட் குறைக்கப்படும் என்றும் குவல பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினருமான அபு பக்கார் ஹம்சா தெரிவித்தார்.

''நாம் நமது சேவையை மாநிலத்திற்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும். மாதந்தோறும் 500 ரிங்கிட் கூட சம்பாதிக்க விரும்பும் கீழ்நிலை மக்கள் கூட பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். எனவே, மாநிலத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும் எங்களின் தியாகத்தை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையிலும் இந்த ஊதியக் குறைப்பை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.'' என்றார் அபு பக்கார் ஹம்சா 

ஞாயிற்றுக்கிழமை இஸ்தானா ஆராவில் பெர்லிஸ் ராஜா துங்கு சைட் சிராஜுதீன் ஜமாலுல்லைல் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் ஸ்ரீ புத்ரா வளாகத்தில் உள்ள மந்திரி புசார் அலுவலகத்தில் இன்று தமது முதல் நாள் பணியைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அபு பக்கார் ஹம்சா அவ்வாறு கூறினார்.

இதனிடையே, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து கருத்துரைத்த அவர் முதலில் மாநில அரசாங்கச் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்களை பெர்லிஸ் சுல்தானின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)