சிரம்பான், டிசம்பர் 22 (பெர்னாமா) -- கடந்த ஆண்டு அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, 5 ஆயிரத்து 368 பங்கேற்பாளர்களுடன் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற சக்தி யோகா பள்ளி, தேசிய அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அந்த வெற்றிப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, கடந்த சனிக்கிழமை, 2025-ஆம் ஆண்டு அனைத்துலக யோகா போட்டியை நடத்தியது.
நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெற்ற இப்போட்டியில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய தப்பு, மேள இசையுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய அப்போட்டியில், சிறப்பு குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
2 நிமிடங்களுக்குள் மூன்று யோக ஆசனங்களை செய்து, ஒவ்வொரு ஆசனத்தையும் குறைந்தது 5 விநாடிகள் நிலைத்திருக்கச் செய்து தங்களின் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தினர்.
நிலைத்தன்மை, ஆசனத்தின் வளைவுகள், துல்லியமான செயல்பாடு, முகபாவனை, ஆசனத்தில் வெளிபாடு ஆகிய அடிப்படைகளில் அவர்களின் படைப்பு மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)