தாசேக் குளுகோர், 20 டிசம்பர் (பெர்னாமா) -- மாணவர்களின் தனித்திறமை மற்றும் சிந்தனை ஆற்றலை வலுப்படுத்தவும், அவர்களுக்கு புறப்பாட நடவடிக்கைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக, பினாங்கைச் சேர்ந்த வட மாநில இந்தியர் சிகையலங்கார சமுகநல இயக்கம், மாநில அளவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான மீனம்பாள் சதுரங்க சுழற்கிண்ண போட்டியை ஏற்று நடத்தியது.
மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சுமார் 108 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெறும் மாணவர்கள் மட்டுமின்றி வெற்றிப் பெற முயற்சிக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழும் கோப்பையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டதாக, வட மாநில இந்தியர் சிகையலங்கார சமுகநல இயக்கத்தின் தலைவர் புவனேஸ்வரன் சக்திவேல் கூறினார்.
''இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு மட்டுமின்றி வெற்றிப் பெற முயற்சிக்கும் மாணவர்களையும் வெற்றியாளர் என்ற அடிப்படையில் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். இதுப்போன்ற போட்டிகளின் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை'', என்றார் அவர்.
இதைத் தவிர்த்து, பாடப்புத்தகங்களுடன் மலாய், ஆங்கிலம், கணிதம், தமிழ் மற்றும் சதுரங்க உள்ளிட்ட பிரத்தியேக வகுப்புகளையும் மாணவர்களுக்கு இந்த இயக்கம் இலவசமாக நடத்தி வருவதாக, அவர் கூறினார்.
இந்நிலையில், அடுத்தாண்டு முதல் இலவசமாக சீன மொழி வகுப்பை மாணவர்களுக்கு ஏற்று நடத்த தங்கள் இயக்கம் திட்டமிட்டிருப்பதாகவும், புவனேஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே, 2025-ஆம் ஆண்டு மீனம்பாள் சதுரங்க சுழற்கிண்ண போட்டியில் வெற்றிப் பெற்ற கெடா, என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த திவேஷ் சிவராஜன் தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
''மீனம்பாள் சதுரங்க சுழற்கிண்ணம் 2025-இல் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. அதோடு, நான்தான் இப்போட்டியின் வெற்றியாளர்'', என்று அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் பேராக், கெடா மற்றும் பினாங்கைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)