ஷா ஆலம், டிசம்பர் 15 (பெர்னாமா) -- மலாக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஒருவருக்குச் சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் நபரை அடையாளம் காண மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சியின் அறிக்கைக்காகப் போலீசார் இன்னும் காத்திருக்கின்றனர்.
மேலும், வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காகச் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மற்றும் சில நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று ஆடவர்களைப் பிரதிநிதித்த அந்த வழக்கறிஞர் முகநூலில் பதிவிடப்பட்ட கருத்துகளைப் படித்த பிறகு டிசம்பர் 5ஆம் தேதி போலீஸ் புகார் அளித்ததாக டத்தோ ஷசெலி கூறினார்.
''கருத்து தெரிவித்த நபரின் சுயவிவரத்தைப் பெறுவதற்குப் பி.டி.ஆர்.எம், எம்.சி.எம்.சியின் உதவியைக் கோரியுள்ளது. எனவே, எம்.சி.எம்.சியின் பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். செக்ஷன் 507 கே.கே / 233 ஏ.கே.எம்மின் கீழ் பி.டி.ஆர்.எம் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது'', என்றார் டத்தோ ஷசெலி கஹார்.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி Geng DT எனப்படும் குழு உறுப்பினர்களான மூவரைப் போலீஸ் சுட்டுக் கொன்றது.
அந்த மூவரின் குடும்ப உறுப்பினர்களைப் பிரதிநிதித்து அந்த வழக்கறிஞர் வாதிடுகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)