இஸ்லாமாபாத், 12 டிசம்பர் (பெர்னாமா) -- அரசியல் தலையீடு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் முன்னாள் உளவுத் தலைவர் ஃபாயிஸ் ஹமிட்-டுக்கு, பாகிஸ்தானில் உள்ள இராணுவ நீதிமன்றம், 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அந்நாட்டில் உயர்பதவியில் இருந்த ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவருக்கு விதிக்கப்பட்ட அரிய தண்டனைகளில் இதுவும் ஒன்றாகும்.
சிறைத் தண்டனையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கீழ் 2019 முதல் 2021 வரை பாகிஸ்தானின் சேவைக்கு இடையிலான உளவுத்துறை, ஐ-எஸ்-ஐ-இற்கு தலைமையேற்ற ஹமிட், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 2022-ஆம் ஆண்டு முதல் விசாரணையில் உள்ளார்.
கானின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகக் காணப்பட்டனர்.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், மாநில பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை மீறுதல், அதிகாரம் மற்றும் வளங்களை தவறாகப் பயன்படுத்துதல், தனிநபர்களுக்கு தவறான இழப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்று இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹமிட் மீதான வழக்குகள் குறித்து விரிவான விவரங்களை வழங்காமல், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று இராணுவம் அறிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)