தாய்லாந்து, டிசம்பர் 11 ( பெர்னாமா) -- பான்டே மீன்ச்சே மாகாணத்தின் ஓ பெய்ச்சுவான்-யில் உள்ள குடியிருப்பு பகுதியில் தாய்லாந்து விஷ வாயுவைப் பயன்படுத்தியதாக கூறும் கம்போடிய தற்காப்பு அமைச்சின் குற்றஞ்சாட்டிற்கு தாய்லாந்து இராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அது ஓர் ஆதாரமற்ற குற்றஞ்சாட்டு என்றும் உண்மைகளைத் திரிக்கும் முயற்சி என்றும் தாய்லாந்து இராணுவம் கூறியுள்ளது.
தமது நாட்டு மக்களுக்கு குழப்பத்தையும் அனைத்துலக ரீதியில் தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய தகவல்களைப் பரப்புவதை புனோம் பென் நிறுத்த வேண்டும் என்று தாய்லாந்து அரச இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி தெரிவித்தார்.
உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் சொத்துகள் உள்ளிட்ட அதன் அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் இராணுவத்தை இலக்காகக் கொண்டுமே மேற்கொள்ளப்படுவதாக தாய்லாந்து இராணுவம் விவரித்தது.
இதனிடையே, தாய்லாந்து விஷ வாயுவைப் பயன்படுத்தியதாக கூறும் கூற்றை ஆதரிக்க உறுதியான ஆதாரமோ அல்லது சுயாதீனமான சரிபார்ப்போ இல்லாத காரணத்தினால் அக்குற்றஞ்சாட்டில் எந்தவொரு அடிப்படையும் இல்லை என்றும் விந்தாய் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)