ஷா ஆலாம், 8 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கெடா மாநில அரசாங்க மாடு வளர்ப்புத் திட்டத்தில், நான்கு லட்சம் ரிங்கிட் ஊழல் வழக்கில் தொடர்பு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நஸ்ருடின், இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் அதை மறுத்து விசாரணைக் கோரினார்.
நீதிபதி டத்தோ முஹமட் நாசிர் நொர்டின் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் அவ்வாறு வாக்குமூலம் அளித்தார்.
வர்த்தகரான அமார் அஸ்ஸுஹட் அபு பாக்கார் உடன் இணைந்து டத்தோ அஸ்மான், நான்கு லட்சம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கெடா அக்ரோ குழும நிறுவனத்திடமிருந்து, குபாங் பாசு, முகிம் சுங்கை லாகாவில் உள்ள பிட்லொட் கெடா அக்ரோ தோட்டத்தில் பிட்லொட் முறையில் மாடு வளர்ப்பு ஒத்துழைப்புத் திட்டத்தைப் பெறுவதற்கு முஹமட் ஹஸ்ஸானாயிம்-மிற்கு உதவ ஊதியமாக அத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, மாலை மணி சுமார் 5 அளவில், பண்டார் பாரு பாங்கி, செக்ஷன் 9-இல், அங்சா எமாஸ் பியூட் நிறுவனத்தின் அலுவலகத்தில் அஸ்மான் இக்குற்றத்தைப் புரிந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்மான் தமது கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் அவரை தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் 75,000 ரிங்கிட் ஜாமின் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)