கோலாலம்பூர், டிசம்பர் 07 (பெர்னாமா) -- கல்வித் துறையைப் புத்தாக்கப் பாதைக்கு கொண்டு செல்லும் புது அணுகுமுறையான Co-Teaching எனப்படும் இணைக் கற்பித்தலை 2027-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கிறது.
ஒரே வகுப்பறையில் இரண்டு ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் முறையே இணைக் கற்பித்தலாகும்.
இது சவால் நிறைந்ததாக இருந்தாலும் கல்வி அமைச்சின் இந்த புதிய சிந்தனை, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, அவர்களைத் திறன்மிக்கவர்களாக வடிவமைக்கும் என்று பொதுமக்களும் நம்பிக்கைக் கொண்டிருப்பது பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காணமுடிந்தது.
ஆசிரியர்கள் இணைந்து, வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் வேளையில், மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளை அடையாளம் காண்பதோடு, அவர்களின் மீது சிறப்பு கவனமும் செலுத்த முடியும்.
இந்த முயற்சி மாணவர்களை நிச்சயம் மெருகேற்றும் என்று சிலர் கருத்துரைத்தனர்.
''அனைத்து மாணவர்களையும் ஒரே ஆசிரியரால் பார்த்துக்கொள்ள முடியாது, எனவே ஒரு வகுப்பறையில் இரு ஆசிரியர்கள் இருக்கும் வேலையும் ஆற்றல் மிக்க ஒரு மாணவனையும் ஆற்றல் குறைமிக்க ஒரு மாணவனின் மீது வெவ்வேறு ஆசிரியர்கள் கவனம் செலுத்தினால் மாணவர்களின் தரன் உயரும்.'' என்றார் உமா தேவி மருதமுத்து
''அதிக மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் இரு ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்களி கவனம் மென்மேலும் அதிகரிக்கும். மேலும் இதன் மூலம் கட்டொழுங்கு பிரச்சனைகளும் குறையும்.'' என்றார் பிரேமா பத்துமலை
கல்வி அமைச்சிற்கு இந்த அணுகுமுறை புதிய சவாலாக இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் இம்முயற்சிக்கான சிறந்த அடைவுநிலையை, அமைச்சால் எட்ட முடியும் என்று சைபர்ஜெயாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டத்தோ டாக்டர் என். எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார்.
''கற்றல் கற்பித்தலிலே பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும். இது 2013 வெளியிடப்பட்ட கல்வி பெரும் திட்டத்திலும் உள்ளது. ஆசிரியரின் பணி திறன் மேன்பற்டிக்கு நிறைய பண உதவியும் ஒதுக்க வேண்டும். '' என்றார் டத்தோ முனைவர் என். எஸ். இராஜேந்திரன்.
மேலும், இந்த அணுகுமுறையை அமைச்சு திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக இதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு முன்னமே வழங்கி அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
''மலேசியாவில் 10,300-கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன, 1 லச்சத்திற்கும் மேற்பட்ட வகுப்பறைகள் இருக்கின்றன 430,000 மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆகவே இதற்கான முறையான திட்டமிடல் செய்யப்பட்டு ஆயத்த பணிகள் நடத்தப்பட வேண்டும்.'' என்றார் டத்தோ முனைவர் என். எஸ். இராஜேந்திரன்
கல்வி தொடர்பிலான சவால்களை, மாணவர்கள் எளிமையாகவும் விவேகமாகவும் எதிர்கொள்வதோடு, கற்றல் கற்பித்தல் நடவடிக்கையையும், இந்த இணைக் கற்பித்தல் அணுகுமுறை சுமுகமாக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்க்கும் அண்மையில் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)