கோத்தா கினபாலு, டிசம்பர் 02 (பெர்னாமா) -- துன் டத்து முஸ்தாபா சமய இடைநிலைப்பள்ளியில் பணியாற்றிய ஒன்பது பள்ளி விடுதி மேலாளர்களின் சேவையைச் சபா மாநில கல்வித் துறை பணிநீக்கம் செய்துள்ளது.
ஆங்கில ஆசிரியரான நோர் அசிமா சைத்தோன் இவ்விவகாரத்தை உறுதிப்படுத்தியதுடன் பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி விடுதி மேலாளர்களில் தாமும் ஒருவர் என்றும் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் முதல் படிவம் மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணத்துடன் தொடர்புப்படுத்தி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் நோர் அசிமா தெரிவித்தார்.
மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது சாரா கைரினா மீதான பகடிவதை சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஐந்து பதின்ம வயது சிறுமிகளில் ஒருவரின் பிரதிநிதியான வழக்கறிஞர் ஜோன் கோவின் விசாரணையின் போது 49 வயதான அந்த சாட்சியாளர் அவ்வாறு கூறினார்.
மாணவர்கள் தங்கள் பெற்றோரைத் தொடர்பு கொள்ள வழங்கப்பட்ட ஆறு பொது தொலைபேசிகள் பற்றி கேள்வி எழுப்பியபோது சாராவின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அவை முடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர்களிடையே பதற்றத்தைக் குறைக்க தலைமை பள்ளி விடுதி மேலாளரான ஆசாரி அப்த் சகாப்பின் உத்தரவின் பேரில் அவ்வாறு செய்யப்பட்டதாக முன்னாள் பள்ளி விடுதி மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
பொது தொலைபேசியின் சேவை முடக்கப்பட்டிருந்தாலும் உடல்நிலை சரியில்லாத முதலாம் படிவ மாணவர் ஒருவர் தனது கைப்பேசியைப் பயன்படுத்தி தாயைத் தொடர்பு கொள்வதற்கு அவர் அனுமதி அளித்ததாகவும் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே,கடந்த ஜூலை 17ஆம் தேதி சபா, கோத்தா கினபாலு எலிசெபெத் ராணி மருத்துவமனையில் சாரா கைரினா மரணமடைந்தது உறுதிபடுத்தப்பட்டது.
ஜூலை 16ஆம் தேதி அதிகாலை மணி நான்கு அளவில் சபா, பத்திரிக்கையில் உள்ள தங்குமிட வசதிகொண்ட பள்ளியின் அருகில் உள்ள கால்வாயில் 13 வயதான சாரா கைரினா சுயநினைவற்ற நிலையில் கிடந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)