ஜாலான் பார்லிமன், 2 டிசம்பர் (பெர்னாமா) -- 2027-ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், CO TEACHING எனப்படும் இணை கற்பித்தல் முயற்சியை செயல்படுத்துவது, நகர் மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்கிடையே இடைவெளியை உருவாக்காது.
மாறாக, ஒவ்வொரு பள்ளியின் தயார்நிலைக்கு ஏற்ப கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோங் தெரிவித்தார்.
இந்த அணுகுமுறை, அந்தந்த பள்ளிகளின் தேவைகள், திறன் மற்றும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த செயலாக்க முறையைத் தீர்மானிப்பதற்கு தலைமையாசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் வோங் கா வோங் கூறினார்.
"2027 பள்ளி பாடத்திட்டத்தில் இணை கற்பித்தல் முயற்சியை செயல்படுத்துவது, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கல்வி அமைச்சின் உத்வேகத்தால் மேற்கொள்ளப்படுகிறது,'' என வோங் கா வோங் கூறினார்.
ஆசிரியர்கள் அல்லது வசதிகள் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் பள்ளிகள் இன்னும் இருப்பதால், சுமையான அல்லது சமமற்ற செயல்பாட்டை தவிர்க்க இவ்வழிமுறை கையாளப்படுகிறது.
தொடக்கக் கட்டத்தில் ஓர் ஆசிரியர் ஒரு புதிய பாடத்தை கற்பிக்கும் முறை இன்னும் பள்ளிகள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், இணை கற்பித்தலை செயல்படுத்துவதில் பள்ளிகளுக்கு இடையே எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், புதிய பாடத்திட்டத்தின் மையக்கருவை செயல்படுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் போதுமான பயிற்சி அளிக்கப்படுவதை கல்வி அமைச்சு உறுதி செய்யும்.
இதில் மூன்று புதிய ஒருங்கிணைந்த கற்றல் பாடங்களான மனிதனும் சுற்றுச்சூழலும், அறிவியலும் தொழில்நுட்ப ஆய்வும் மற்றும் கலையும் உலக ஆய்வும் அதில் அடங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)