ஜாலான் பார்லிமன், 2 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி வரையில், தானியங்கி வேக வரம்பு கட்டுப்பாட்டு சாதனம், எஸ்.எல்.டி-யின் முதற்கட்ட பயன்பாட்டின் இணக்க நிலை, 48.37 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் முதலாம் தேதி தொடங்கிய அமலாக்கத்தின்போது அதன் இணக்க நிலை, 2.68 விழுக்காடாக இருந்தது.
முதற்கட்ட பயன்பாட்டின்போது, சாலை போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே மேற்கொண்ட கடுமையான அமலாக்க நடவடிக்கையின் மூலம் அந்த எண்ணிக்கை அதிகரித்ததாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
விரைவுப் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் மொத்த வாகன எடை 3,500 கிலோகிராம் எடையை விட அதிகமாக உள்ள சரக்கு வாகனங்களும் அதில் அடங்கும் என்று அந்தோணி லோக் கூறினார்.
''சிறந்த அளவிலான இணக்கத்தை அடைய எம்.ஓ.தி தொடர்ந்து எஸ்.எல்.டி-யைக் கட்டாயம் அமல்படுத்தும். இந்த சாதனத்தை பொருத்தும் செயல்பாடும் ஜே.பி.ஜே அங்கீகாரம் பெற்ற மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்,'' என அந்தோணி லோக் கூறினார்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி நிலவரப்படி, எஸ்.எல்.டி-யை பொருத்துதல் மற்றும் செயல்பாடுகளின் சரிபார்ப்பை மேற்கொள்ள, நாடு முழுவதும் சுமார் 307 பதிவு பெற்ற அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக லோக் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)