கோலாலம்பூர், 02 டிசம்பர் (பெர்னாமா) -- பொதுப்பணி அமைச்சரான டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி, நாளை முதல் குஸ்கோப் எனப்படும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சரின் பொறுப்பையும் கடமையையும் தொடர்வார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்முடிவை அறிவித்ததாக, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரும் அமைச்சரவை செயலாளருமான டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பகார் தெரிவித்தார்.
குஸ்கோப் அமைச்சராக இருந்த காலம் முழுவதும் பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இவோன் பெனடிக் வழங்கிய அனைத்து பங்களிப்புகளுக்கும் சேவைக்கும் அரசாங்கம் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி தெரிவித்தார்.
KINABALU PROGRESIF BERSATU கட்சி, உப்கோவின் தலைவருமான டத்தோ இவோன் தாம் வகித்து வந்த அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
சபாவின் அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்தவும், மாநில அரசியல் களத்தில் உப்கோவின் நிலையை வலுப்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதனிடையே, குஸ்கோப்பின் செயல்பாடுகளின் தொடர்ச்சியையும் சீரான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக முழு அர்ப்பணிப்புடன் அந்நியமனத்தை ஏற்றுக் கொள்வதாக தமது முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ நந்தா லிங்கி குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)