கோத்தா கினபாலு, நவம்பர் 30 (பெர்னாமா) -- சபா மாநில முதலமைச்சராக சபா மக்கள் கூட்டணி, ஜி.ஆர்.எஸ்-இன் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் இரண்டாவது முறையாக இன்று பதிவியேற்றார்.
17-வது சபா மாநில தேர்தலில் சுலாமான் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
அதனையடுத்து, சபா கோத்தா கினபாலுவில் உள்ள இஸ்தானா ஶ்ரீ கினாபாலுவில் இன்று அதிகாலையில் ஹஜிஜி நோர், மாநில ஆளுநர் துன் மூசா அமான் முன்னிலையில் முதலமைச்சராக மீண்டும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
"நான், ஹாஜி ஹாஜிஜி பின் ஹாஜி நோர் சபாவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு என்னுடைய கடமைகளை நேர்மையாக, என்னால் முடிந்தவரை நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். சபா மாநிலத்திற்கு எனது உண்மையான விசுவாசத்தை அளிப்பேன் என்றும், மலேசிய கூட்டரசையும், மலேசிய கூட்டமைப்பின் அரசியலமைப்பையும் சபா மாநில அரசியலமைப்பையும் நான் பாதுகாப்பேன், தற்காப்பேன்," என்றார் அவர்.
சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டத்தோ அசிசா நவாவி முன்னிலையில் 70 வயதுடைய ஹஜிஜி பதவி உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)