Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பேராக்கில் உணவுக் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது

27/11/2025 05:21 PM

பேராக், 27 நவம்பர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக மஞ்சோங் மற்றும் பேராக் தெஙா ஆகிய மாவட்டங்களில், உணவுப் பொருட்களின் விநியோகம் இதுவரை போதுமான அளவில் உள்ளது.

சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து, தமது தரப்பிற்கு இதுவரை எந்த புகாரும் கிடைக்கவில்லை என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பேராக் மாநில இயக்குநர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

''பேராக்கில், எங்கள் தரவுகளின்படி, போதுமான அளவில் உணவுப் பொருட்களுக்கான கையிருப்பு இருப்பதை எங்களால் உறுதி செய்ய முடியும். வெள்ளப் பகுதிகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போது கூட, பேராக்கில், குறிப்பாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், எங்கள் அவசர மையங்களைத் திறந்துள்ளோம்,'' என்றார் அவர்.

போதுமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அன்றாடத் தேவைகள் கிடைப்பதில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருப்பதற்கும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளுக்கும், பாசார் பாது திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கமலுடின் கூறினார்.

இன்று ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான் பொதுச் சந்தையில் பாசார் பாது திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)