புத்ராஜயா, நவம்பர் 25 (பெர்னாமா) -- நாட்டின் பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 2025ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வு நாடு முழுவதும் சீராக நடைபெற்று வருகின்றது.
இம்முறை நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுத மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 372 பேர் பதிவு செய்துள்ளனர்.
எஸ்.பி.எம் தேர்வு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிர்வகிப்பு நிறுவனங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதாகக் கல்வித் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் அசாம் அஹமாட் தெரிவித்தார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதற்குக் கல்வி அமைச்சும் தேர்வு வாரியமும் மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியாவிடம் இருந்து அண்மைய தகவல்களைப் பெறுவதாக டாக்டர் முஹமட் அசாம் அஹமாட் கூறினார்.
''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உதவ, நட்மா, ஏ.பி.எம், தீய்ணைப்புத் துறை, போலீஸ் மற்றும் இதர அரசு நிறுவனங்களுடன் இணைந்து ஒ.பி.எஸ் பாயுங்யின் கீழ் கல்வி அமைச்சு ஒரு கூட்டத்தை நடத்தியது.'' என்றார் டாக்டர் முஹமட் அசாம் அஹமாட்.
இன்று புத்ராஜெயா Presint 11இல் உள்ள இடைநிலை பள்ளியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, கசிந்ததாகக் கூறப்படும் எஸ்.பி.எம் தேர்வு தாள் விற்பனை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரைப் பெறவில்லை என்றாலும் அது தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கல்வித் தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
''சமூக ஊடகங்களிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அது தேர்வு இயக்குநரின் தேர்வு வாரியத்தின் இயக்குநரின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. அவர்களிடம் ஒரு நடைமுறை இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,'' என்றார் டாக்டர் முஹமட் அசாம் அஹ்மாட்.
எஸ்.பி.எம் வினாத்தாள்கள் கல்வி அமைச்சின் சரியான கண்காணிப்பில் உள்ளதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)