Ad Banner
Ad Banner
 பொது

அம்ரி & ரேமண்ட் தொடர்பான மறுவிசாரணை வெளிப்படையாக நடத்தப்படும்  

13/11/2025 04:54 PM

கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டும் பாதிரியார் ரேமண்ட் கோவும் காணாமல் போன வழக்கில் நீதி முழுமையாக நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அதன் மறுவிசாரணை வெளிப்படையாகவும் எவ்வித தலையீடுமின்றி நடத்தப்படும். 

எந்தவொரு தரப்பையும் பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும்
சம்பந்தப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

"நடப்பில் உள்ள அரசாங்கம் சட்டத்தின் கொள்கையை மதிக்கிறது. இந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் உறுதிப்பூண்டுள்ளது. முந்தைய விசாரணை முடிக்கப்படாவிட்டாலும் போலீஸ் உடனடியாக ஒரு புலனாய்வு குழுவை அமைத்தது. ஆனால் இம்முறை ஏசிபி பதவியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியின் தலைமையில் அமைக்கப்படவுள்ளது," என்றார் அவர்.
 
அம்ரி மற்றும் கோ தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் நாட்டின் மிகப்பெரிய அமலாக்க நிறுவனமாக நீண்டகால வரலாற்றையும் சிறப்பையும் பதிவு செய்திருக்கும் பி.டி.ஆர்.எம்-இன்  செயல்பாட்டு தர விதிமுறை எஸ்ஓபி மற்றும்  விசாரணைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் லெடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் இப்ராஹிம் சைட் நோ எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ சைஃபுடின்  அவ்வாறு பதிலளித்தார்.

2016-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி பெர்லிஸ் ஹோப் கழகத்தின் தோற்றுநர் அம்ரியும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பாதிரியார் ரேமண்ட் கோவும் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)