ஜெய்பூர், 5 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அருகே மது அருந்திவிட்டு லாரி ஓட்டியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் 17 வாகனங்களை மோதிய விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்த வேளையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஹர்மடா பகுதியில் நிகழ்ந்த இவ்விபத்தில், லாரி ஓட்டுநர் வாகனத்தை வேகமாகச் செலுத்தியதில் லோஹாமண்டி சாலையில் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
இதனால், எதிர் திசையிலிருந்து வந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல வாகனங்களை மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த லாரி ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும், பல வாகனங்களை மோதிய போதிலும், லாரியை நிறுத்தாமல் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அதோடு, தொடர்ந்து வாகனங்களையும் பாதசாரிகளையும் மோதிய அவர், ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இறுதியாக டிரெய்லர் ஒன்றை மோதி தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
மேலும், இவ்விபத்துக்கு லாரியின் பிரேக் செயலிழப்பு காரணம் அல்ல என்று கூறிய மூத்த அதிகாரிகள், ஓட்டுநர் மது போதையில் இருந்ததையும் உறுதிப்படுத்தினர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)