கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 16-ஆகக் கட்டுப்படுத்தும் பொருட்டு, e-KYC எனப்படும் பயனர் அடையாள சரிபார்ப்பை மேற்கொள்வதற்கான சிறந்த வழிமுறை குறித்து, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்கள், சமூக ஊடக தள வழங்குநர்களுடன் விரைவில் கலந்துரையாடும்.
இணையத்தில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு e-KYC செயல்படுத்தப்படுவது மிக முக்கியமானது என்றும், இதில் அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அடங்கும் என்றும், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''மை கார்டு, கடப்பிதழ் மற்றும் மை டிஜிட்டல் ஐடி போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தும் e-KYC செயல்முறையை, தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான சிறந்த வழிமுறை குறித்து விவாதிக்க, எம்.சி.எம்.சி மற்றும் பல துறைகள் உட்பட நிறுவனங்கள் (எதிர்காலத்தில்) சிங்கப்பூருக்குச் செல்லும். மெட்டா, கூகள், எக்ஸ் மற்றும் டிக்டோக் நிறுவனங்களைச் சந்திக்கும்,'' என்றார் அவர்.
இந்நடவடிக்கை, 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட விண்ணப்ப சேவை வழங்குநர் வகுப்பு உரிமம் ASP(C), அமலாக்கத்திற்கும், 2024-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் ஏற்ப இருப்பதாக ஃப்ஹமி மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)