கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட வியூக கூட்டமைப்பின் அடிப்படையில், இவ்வாண்டு கொண்டாடப்படும் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 65-வது ஆண்டு நிறைவையொட்டி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மலேசியாவும் தென் கொரியாவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இன்று நடைபெற்ற 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளுக்கு மத்தியில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் இடையிலான 15 நிமிட இருதரப்பு சந்திப்பின் போது இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.
15 நிமிடங்கள் நீடித்த இந்த இருதரப்பு சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் விவேக நகர மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
அதேவேளையில், பசுமை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, AI மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் போன்ற புதிய துறைகளில் இரு நாடுகளும் மிகுந்த ஆற்றலைக் கண்டு வருவதால், இவை எதிர்காலத்தில் மலேசியா-தென் கொரியா வியூக உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதில் தென் கொரியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் மலேசியா பாராட்டியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)