Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது ஏற்படும் சிக்கல்களை ஊடகவியலாளர்கள் தெரிவிக்க வேண்டும்

24/10/2025 07:31 PM

ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது ஏற்படும் சிக்கல்களை ஊடகவியலாளர்கள் தெரிவிக்க வேண்டும்

புத்ராஜெயா, 24 அக்டோபர் (பெர்னாமா) -- 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள், அக்காலக்கட்டத்தில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், தங்கள் தரப்பிடம் தெரிவிக்குமாறு தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக் கொண்டுள்ளார். 

கோலாலம்பூர் மாநாட்டு மையம், அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் அனைத்துலக ஊடக பிரதிநிதிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான செய்தியாளர்கள் கலந்து கொண்டு வரலாறு படைத்ததே இதற்கு காரணமாகும்.

ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இணையச் சேவை பிரச்சனைகள் அல்லது நலன்சார்ந்த பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். 
ஏனெனில் மலேசியாவில் நாங்கள் நடத்திய உச்சநிலை மாநாட்டு வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுவாகும். ஜப்பானில் இருந்து மட்டும் 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். எனவே, ஏதாவது இருந்தால் தயவு செய்து என்னுடன் கலந்தாலோசிக்கவும்,'' என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பின்போது டத்தோ ஃபஹ்மி அவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்று நண்பகல் நிலவரப்படி 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்கள் குறித்த செய்திகளைச் சேகரிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டின் 290 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 2,854 ஊடகவியலாளர்கள் பதிவு செய்திருந்தனர்.

அவற்றில் அதிகாரப்பூர்வ மலேசிய ஊடகங்களின் 648 பிரதிநிதிகள் 327 உள்ளூர் ஊடகங்கள் மற்றும் 1,277 அனைத்துலக ஊடகங்கள் அடங்கும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)