Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஈப்போ லிட்டில் இந்தியா மேம்படுத்தப்படும் - சிவநேசன்

17/10/2025 05:34 PM

ஈப்போ, 17 அக்டோபர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் பல ஆண்டுகளாக இந்திய வர்த்தகர்களின் வணிகத் தளமாக விளங்கும் ஈப்போ லிட்டில் இந்தியா பகுதியை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்கள் வரையப்பட்டு வருவதாக, பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார். 

அந்த வணிக வளாகத்தை மேம்படுத்தும் பொருட்டு முன்னதாக வரையப்பட்ட திட்டங்களை தொடர்வதற்கான பேச்சுவார்த்தையை, ஈப்போ டத்தோ பண்டார் டத்தோ சமாக்‌ஷாரி ஹனிப்பா உடன் தாம் மேற்கொண்டுள்ளதாக சிவநேசன் தெரிவித்தார்.

"ஈப்போ முன்னாள் டத்தோ பண்டார் டத்தோ ருமாய்சி பாஹ்ரின் பல திட்ட வரைவுகளைச் செய்தார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அவர் அதனைச் செய்தார். அதனை தற்போதுள்ள டத்தோ பண்டார் தொடரவிருப்பதாக உறுதியளித்துள்ளார். நிச்சயமாக அடுத்த ஆண்டு இங்கு உருமாற்றம் இருக்கும். அதோடு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் நாடாளுமன்ற தொகுதி இது. அவரும் இதற்கான மேம்பாட்டு திட்டத்திற்கு பங்களிப்பார்," என்றார் அவர்.

நேற்றிரவு ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்திற்கு வருகை அளித்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதோடு, வாகனங்களை நிறுத்துவதற்கும் போதிய இடவசதி இல்லாத விவகாரமும் கூடியவிரைவில் சரிசெயப்படும் என்று சிவநேசன் குறிப்பிட்டார்

"இங்கு வாகனங்கள் நிறுத்துவதற்காக அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு இங்கு வணிக சங்கத்தினரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இடத்தை சேமிப்பதோடு அதிகமான கார்களையும் இங்கு நிறுத்த முடியும்," என்றார் அவர்.

இதனிடையே, லிட்டில் இந்தியா மேம்பாட்டிற்காக மாநில வரவுசெலவுத் திட்டத்தில் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை கோரியுள்ளதாகவும், அக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சிவநேசன் மேலும் கூறினார்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]