கோலா லிப்பிஸ் , 12 அக்டோபர் (பெர்னாமா) - சனிக்கிழமை, பகாங் மாநில அளவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்தில் உடற்பயிற்சி பயிற்றுநர் ஜெய் பிரபாகரன் குணசேகரன் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாள்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் இடைவிடாமல் உடற்பயிற்சி செய்து, அவர் இச்சாதனையை புரிந்திருக்கிறார்.
இதன் வழி, மலேசிய சாதனை புத்தகத்தில் மூன்றாவது முறையாக ஜெய் பிரபாகரன் தமது பெயரை பதித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை 3 மணி நேரத்திற்கு, இரு வெவ்வேறான உடற்பயிற்ச்சி செய்த ஜெய் பிரபாகரன், சனிக்கிழமை மேலும் 3 மணி நேரத்திற்கு மற்றொரு உடற்பயிற்சியை செய்து சாதனை படைத்தார்.
''இவ்வனைத்து சாதனைகளையும் மூவாயிரம் முறையாக செய்ததன் பொருட்டு எனக்கு இச்சாதனைக்கான வாய்ப்பு கிடைத்தது. இச்சாதனைக்காக இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முறையில் பயிற்சி செய்வேன். உணவும் அதற்கு ஏற்றாற்போல கட்டுப்பாடாக எடுத்து கொள்வேன்,'' என்றார் அவர்.
அவரின் முயற்சியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த மலேசிய சாதனை புத்தகம், தேசிய விளையாட்டு தினத்துடன் இணைந்து மூன்று தேசிய சாதனைகளைப் படைத்த முதல் மலேசியராக ஜெய் பிரபாகரனை அங்கீகரித்தது.
மலேசியாவில் இரு சாதனைகளை புரிந்துள்ள 29 வயதான ஜெய் பிரபாகரன், உலக அளவில் இரு சாதனைகளையும் ஆசிய அளவில் ஒரு சாதனையையும் புரிந்து பெருமை சேர்த்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)