நிபோங் திபால், 12 அக்டோபர் (பெர்னாமா) - பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து புதிய வீடுகளுக்கான சாவியைப் பெற்றதைத் தொடர்ந்து, பைராம் தோட்ட மக்களின் இவ்வாண்டு தீபாவளி அர்த்தம் நிறைந்ததாக மாறியுள்ளது.
நாற்பது ஆண்டுகளாக தோட்டப்புறத்தில் வாழ்ந்த நிலையில் முதல் முறையாக தாமான் பைரால் பாருவில் புதிய வீட்டில் தமது கணவர் மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளதாக கூறுகிறார் 61 வயதுடைய எஸ்.மல்லிகா.
இதற்கு முன்னர் தோட்டத்தில் வசித்த போது இன்னல்களை எதிர்நோக்கியதாக கூறிய மல்லிகா, பல ஆண்டுகளுக்குப் பின்னரே தங்களின் வேதனைக் குரலுக்கு விடியல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் வீட்டில் ஏழு பேர். இதற்கு முன்னர் தோட்டத்தில் வசித்த போது இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும். அதனால் தங்குவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது கிடைத்துள்ள வீட்டில் மூன்று அறைகள் உள்ளன. நிறைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள், " என்று புதிய வீடு பெற்றவர்களில் ஒருவரான எஸ்.மல்லிகா என்பவர் தெரிவித்தார்.
மல்லிகாவைப் போன்று தமது குடும்பமும் நீண்டகாலமாக தோட்டத்தில் வசித்து வந்த நிலையில், இவ்வாண்டு தீபாவளி மறக்க முடியாதது என்று 48 வயதுடைய ஏ.செல்வதுரை தெரிவித்தார்.
"தீபாவளிக்கு பின்னர் தான் புதிய வீட்டில் குடிபுகுவோம்.ஆனாலும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார் அவர்.
வாக்குறுதி அளித்தது போல பினாங்கு அரசாங்கம் இவ்வாண்டு புதிய வீட்டில் தீபாவளியை வரவேற்கும் வாய்ப்பினை தமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக 47 வயதுடைய எஃப். எட்வர்ட் ராஜா என்பவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
"இனி எங்களுக்கு சொந்த வீடு உள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடைக்கிறோம். இந்த வீடும் பைராமிலே உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற புதிய வீடுகளுக்கான சாவி வழங்கும் நிகழ்ச்சியை பினாங்கு மாநில முதல்வர் சௌகொன் யோவும் கல்வியமைச்சரும் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஃபட்லினா சிடேக்கும் கலந்து கொண்டனர்.
ஒரு கோடியே 84 லட்சம் ரிங்கிட மதிப்புடைய இந்த இடமாற்றத் திட்டத்தில், 68 தரை வீடுகள், இரு மாடிகள் கொண்ட பள்ளி மற்றும் கோயில் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)