மத்தியப் பிரதேசம், 07 அக்டோபர் (பெர்னாமா) -- நச்சு கலந்த இருமல் மருந்தை பரிந்துரைத்த குற்றத்திற்காக, மருத்துவர் ஒருவரை, இந்திய போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த மருந்தினால், 14 குழந்தைகள் உயிரிழந்த காரணத்தினால், போலீசார் நோக்கமில்லாக் கொலை விசாரணையைத் தொடங்கினர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
Coldrif என்ற அந்த இருமல் மருந்தை கடந்த ஒரு மாதமாக உட்கொண்டதைத் தொடர்ந்து, அக்குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பினால் உயிரிழந்துள்ளனர்.
அந்த மருந்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 500 மடங்கு அதிகமாக அதாவது உலக சுகாதார நிறுவனம்,WHO-வும் இந்திய அதிகாரிகளும் அங்கீகரித்த ஒரு விழுக்காட்டைக் காட்டிலும் 46 விழுக்காட்டிற்கும் அதிகமாக டைஎதிலீன் கிளைக்கால் நச்சு இருந்தது தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கில், கோல்ட்ரிஃப் தயாரிப்பாளரான ஸ்ரேசன் பார்மாவை, முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.
மேலும், பெரும்பாலான குழந்தைகளுக்கு அம்மருந்தை பரிந்துரைத்த பிரவீன் சோனி என்ற மருத்துவரையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இம்மருந்து விற்பனை செய்யப்படாததை உறுதி செய்ய, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கிடங்குகளில் சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கின்படி, கொலைக்கு சமமற்ற குற்றமற்ற கொலை, மருந்துகளில் கலப்படம் செய்தல், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களைச் சட்டத்தை மீறி தயாரித்தல், விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் எதிர்கொள்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனமும் அதன் அதிகாரிகளும் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)