கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- 2019-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில், சாலைப் போக்குவரத்துத் துறை, JPJ மேற்கொண்ட சோதனை மற்றும் பாதுகாப்பு தணிக்கை, ஜி.ஐ.எஸ்.ஏ (JISA) மூலம் மொத்தம் 562 வணிக வாகன இயக்குநர் உரிமங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது தடைசெய்யப்படும் நிலையில் உள்ளன.
அதே காலக்கட்டத்தில், 11 நடத்துனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட வேளையில், 12 வாகன பெர்மிட்டுகளும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''இதுவரை, 562 நடத்துநர் உரிமங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இடைநீக்க செயல்முறைக்கு உட்பட்டுள்ளன. மேலும் 56 வாகன பெர்மிட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் 24 எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்த நடவடிக்கைகளின் எண்ணிக்கை 665 ஆகும். மேலும் இந்நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்துவோம். குறிப்பாக, இந்த ஆண்டு இந்த தணிக்கைகளை கண்காணிக்கவும், சீரற்ற மற்றும் திடீர் தணிக்கைகள் அல்லது திடீர் சோதனைகளை நடத்தவும் சிறப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்,'' என்றார் அவர்.
இன்று, மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது, மாஸ் காடிங் நாடாளுமன்ற உறுப்பினர், மோர்டி பிமோல் எழுப்பிய கேள்விக்கு அந்தோணி லோக் அவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில், ஜி.ஐ.எஸ்.ஏ-வின் கீழ் பல்வேறு வகையான செயல்பாடுகளை உள்ளடக்கி, நாடு முழுவதிலும் 7,228 தணிக்கைகளை ஜே.பி.ஜே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)