கோத்தா கினபாலு, 06 அக்டோபர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், இன்று அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
இன்று பிற்பகல் மணி 2.54-க்கு, மாநில நிர்வாக மையமான மெனாரா கினாபாலுவில் சபா அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நூர் அதனை அறிவித்தார்.
''சட்டமன்றக் கலைப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, சபா மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ பங்லிமா மூசா அமானை நான் சந்தித்தேன். அவரின் ஒப்புதலுடன், 16வது சபா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படும்,'' என்றார் அவர்.
முன்னதாக, இன்று காலை மணி 8.51-க்கு, துன் மூசாவை சந்திக்க ஹஜிஜி இஸ்தானா ஶ்ரீ கினாபாலு சென்றிருந்தார்.
அவருடன், மாநில துணை முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜோச்சிம் குன்சலமும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.
சபா மாநிலத்தில் 79 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் 73 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும்.
மீதமுள்ள ஆறு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற 16-வது சபா மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் பேரிக்காதான் நெஷனலுடன் கூட்டணி வைத்திருந்த ஜி.ஆர்.எஸ் கட்சி, 73 தொகுதிகளில் 41 தொகுதிகளை வென்றிருந்தது.
வாரிசான் கட்சி 23 தொகுதிகளை வென்றிருந்த வேளையில், நம்பிக்கை கூட்டணி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)