கோப்பெங், 05 அக்டோபர் (பெர்னாமா) - கரையான் தொல்லையால் வகுப்பறைகள் சேதமடைந்திருக்கும் பேராக் கோப்பெங் தமிழ்ப்பள்ளியில் அடுத்தாண்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கும்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாக சேதம் அடைந்துள்ள வகுப்பறைகளை சீர்ப்படுத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கத்திடம் தாம் கோரியுள்ளதாக GOPENG நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹொங் தெரிவித்தார்.
அறுபது ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பள்ளிக் கூடத்தில் 120 மாணவர்கள் கல்வி பயிலும் வேளையில், 16 ஆசிரியர்கள பணிபுரிகின்றனர்.
மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த இப்பள்ளியில் நிலைமையை உணர்ந்து, முன்னதாக மாவட்ட கல்வி இலாகா பழுது பார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தாலும், இப்போதுதான் அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதாக டான் கார் ஹொங் கூறினார்.
''கடந்தாண்டே பள்ளியின் நிலை குறித்து, குறிப்பாக கரையான்களால் வகுப்பறைகள் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது குறித்து கல்வியமைச்சிடம் நாங்கள் தெரிவித்து விட்டோம். அதன் பலனாக கோப்பெங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கிடைப்பதற்கு கல்வியமைச்சு அனுமதி அளித்துள்ளது. நிர்வாக தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர ஆவண தயாரிப்புக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. நானும் தேஜா சட்டமன்ற உறுப்பினரும் இது குறித்த துரித நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவோம்,'' என்றார் அவர்.
கோப்பெங் லாவான் கூடாவில் உள்ள சமூக மண்டபத்தில் இன்று நடைபெற்ற கோப்பெங் மகளிருடன் தீப ஒளி பயணம் 2025 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)