Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கவி படைப்பாளர்களின் திறமைக்கு முகவரி தருகிறது 'கவிமுன்றில்'

05/10/2025 08:36 PM

பெட்டாலிங் ஜெயா, 05 அக்டோபர் (பெர்னாமா) -  ஓர் எழுத்தாளரின் எண்ணங்கள் நூலாக மாறும் தருணங்கள் உணர்வுப்பூர்வமானது என்பதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ‘கவிமுன்றில்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. 

கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கவிதை பயிலரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் தங்களது இலக்கிய திறனை வளர்த்து கொண்ட புதிய கவி படைப்பாளர்கள் எண்மரை அறிமுகப்படுத்தும் நோக்கில் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் இவ்விழாவைச் ஏற்று நடத்தியிருந்தது.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள தோட்ட மாளிகையில், ‘கவிமுன்றில்’ எனும் தலைப்பில் இளம் எழுத்தாளர்கள் எட்டு பேரின் இந்த கவிதை நூல்கள் வெளியீட்டு விழா மாலை மணி 3  தொடங்கி இரவு மணி 7 வரை நடைபெற்றது.

இளம் எழுத்தாளர்களைத் தாழ்த்திப் பார்க்காமல் அவர்களுக்கேற்ற முறையில் வழிகாட்டி, உற்சாகப்படுத்த மூத்த எழுத்தாளர்கள் முன்வர வேண்டும் என்று  அம்மன்றத்தின் தலைவரும் எழுத்தாளருமான பொன் கோகிலம் பொன்னுசாமி கேட்டுக்கொண்டார்.

இதனிடயே, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் புதிய முயற்சியையும் தமது தரப்பில் மேற்கொண்டுள்ளதாக விழாவில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

"மலேசியாவில் பதிப்பிக்கப்படுகின்ற புத்தகங்கள், இதுவரை பதிப்பிக்கப்பட்டிருக்ககூடிய புத்தகங்களை முதல் கட்டமாக 700 புத்தங்களை இலக்கவியல் வடிவில் நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். அதற்க்கு அடுத்து, அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும். ஆகவே, புத்தங்களைத் தேடி சென்று வாங்கி படிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அடைப்படையில் இலக்கவியல் புத்தக வாயிலாக மாணவர்கள் தங்கள் வாசிப்பை அதிகரித்துக் கொள்ளலாம்," என்றார் அவர். 

மேலும், தங்கள் படைப்பின் நோக்கம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து கவி படைப்பாளர்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர்.

"வணக்கம், இந்தக் கவிதைக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் இல்லையென்றாலும் இது ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பிரதிபலிக்கின்றது. இந்தக் கவிதையை முழுமையாக எழுத நான் சுமார் ஒன்பது மாதங்களுக்கும் ஓர் ஆண்டுக்கும் இடையில் காலம் எடுத்துக் கொண்டேன். எழுதி முடித்த பிறகு, அதனை நூலாகத் தொகுப்பதற்கு ஓர் ஆண்டு நேரம் பிடித்தது," என்று அன்பரசன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

"முதலாவதாக, எழுதத் தயங்கக் கூடாது. நம்முடைய மனதில் இருக்கிறதைத் தாராளமாக எழுத வேண்டும். ஆரம்ப காலக்கட்டத்தில் எனக்கு எழுதத் தயக்கம் இருந்தது. 'நான் எழுதுவது உண்மையில் கவிதையா?' என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது ஆனால் அந்த மாதிரியான சந்தேகங்களை விலக்கி மனதிற்குத் தோன்றுவதைக் கட்டுபாடில்லாமல் எழுத ஆரம்பித்துவிட்டால் கவிதைகள் தானாக வெளிவந்துவிடும்," என்று ஜமுனாஸ்ரீ பொன்னுசாமி குறிப்பிட்டார்.
 
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன், சிங்கப்பூரைச் சேர்ந்த பேச்சாளார் முனைவர் சித்துராஜ் பொன்ராஜ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)