பொக்கோ செனா, 05 அக்டோபர் (பெர்னாமா) -- தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல், மொழித்திறன் மற்றும் சிந்தனைக் கூர்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையே 'கென்வா’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பினாங்கு மாநிலத் தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஒத்துழைப்புடன், கப்பளா பத்தாஸ் பழனியாண்டி தமிழ்ப்பள்ளி இந்த முயற்சியை முன்னெடுத்து போட்டியை நடத்தியிருக்கின்றது.
மாநிலம் முழுவதும் இருந்து 110 மாணவர்கள் இந்த 'கென்வா’ போட்டியில் பங்கேற்று தங்களின் இலக்கவியல் படைப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதற்கு, பினாங்கு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியதாக அக்கழக தலைவரும் பழனியாண்டி தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியருமான செல்வகுமரன் முனியாண்டி தெரிவித்தார்.
பொக்கோ செனாவில், வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இப்போட்டியை பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டத்தோ ஸ்ரீ புலவேந்திரன் மாணவர்களை ஊக்குவித்தார்.
மேலும், பழனியாண்டி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய அர்ப்பணிப்பான பங்களிப்பால், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இப்போட்டி சிறப்பான முறையில் நடத்தப்பட்டதாக செல்வகுமரன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)