சுங்கை பூலோ, 05 அக்டோபர் (பெர்னாமா) -- அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள B40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு ஏ.ஐ.எம் எனப்படும் அமானா இக்தியார் மலேசியாவின் ஒத்துழைப்புடன், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் 16,600 உணவுக் கூடைகளை வழங்கினார்.
சுமார் 20 லட்சம் ரிங்கிட் செலவில் அந்த உணவுக் கூடைகள் தயாரிக்கப்பட்டதாகவும், அவை நாடு முழுவதும் எட்டு லாரிகளின் மூலம் விநியோகிக்கப்படவிருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
இத்திட்டத்திற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் தமது பங்களிப்பை வழங்கியதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
அரிசி, சமையல் எண்ணெய், முறுக்கு, அதிரச மாவு, பருப்பு, நல்லெண்ணெய் உள்ளிட்ட தீபாவளிக்கு பயன்படும் இன்னும் பல பொருள்கள் அக்கூடையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
''பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரையில் உள்ள B40 பிரிவைச் சேர்ந்த அனைத்து இந்திய குடும்பங்களுக்கும் வழங்கவுள்ளோம். அரிசி, சமையல் எண்ணெய், முறுக்கு, அதிரச மாவு, பருப்பு, நல்லெண்ணெய் போன்ற பொருள்கள் அதில் உள்ளன,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், சுங்கை பூலோவில் அந்த உணவுக் கூடை லாரிகளை வழியனுப்பி வைத்தப் பின்னர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
தீபாவளி பண்டிகைக்குள் B40 பிரிவைச் சேர்ந்த அனைத்து இந்திய குடும்பங்களும் அந்த உணவுக் கூடைகளைப் பெறுவர் என்று ரமணன் உறுதியளித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத்துடன் இணைந்து சில அரசாங்க சார்பற்ற இயக்கங்களும் இந்த நற்பணியில் கைக்கோர்த்தன.
''டத்தோ ஶ்ரீ ரமணனுடன் இணைந்து நாங்கள் 35 உணவுக் கூடைகளை வழங்கினோம். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நற்பணியை நாங்கள் செய்து வருகிறோம். இங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்,'' என்று நளினி சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் கூடுதல் 1,000 உணவுக் கூடைகளை அங்குள்ள B40 பிரிவு மக்கள் பெற்றுக் கொண்டனர்.
''தற்போது பொருள்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த உணவுக் கூடையின் மூலம் எங்களின் சுமை குறைகின்றது. அதில் பொருள்களும் தரமாக உள்ளன,'' என்று ஏழுமலை ஜெகதம்பாள் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், பிரிக்ஃபீல்ட்சில் இடப் பற்றாக்குறையால் தீபாவளி சந்தையைத் தொடங்குவதில் சிக்கல்களை எதிர்கொண்ட வணிகர்கள் விரைவில் தங்கள் முன்பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்று ரமணன் உறுதியளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]