கோலாலம்பூர், 05 அக்டோபர் (பெர்னாமா) - GLOBAL SUMUD FLOTILLA, GSF மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற மலேசியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நாடு தழுவிய அளவிலான மலேசியர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டுள்ளனர்.
பிரதமரின் இந்த முயற்சியானது, உலக அளவில் சிறந்த அரச தந்திர உறவுகளை மலேசியா கொண்டுள்ளதை நிரூபித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
''ஜி.எஸ்.எஃப் எனும் பயணத்தில் இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசியர்களை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மீட்டதற்காக பிரதமருக்கு நன்றி கூறுகிறேன். சிக்கிக் கொண்டவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக மீட்டதற்காக அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,'' என்று ஹி ஹெய்லிங் ஒட்டுநரான முஹமட் சயுத்தி வான் சிக் என்பவர் தெரிவித்தார்.
''பிரதமரின் சிறந்த அரசதந்திர உறவுகளால ஜி.எஸ்.எஃப் ஆர்வலர்களை அவர்களின் குடும்பங்களிடம் பாதுகாப்பான முறையில் மீண்டும் ஒப்படைக்க முடிந்தது. பிரதமருக்கு நன்றி கூற விரும்புகிறேன்,'' என்று பொதுசேவை ஊழியரான நோர்லய்லீனா மொஹா மொத்தார் என்பவர் கூறினார்.
''வெளிநாடுகளுடனான மலேசியாவின் அரசதந்திர உறவுகள் எவ்வளவு சிறந்த நிலையில் உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது. அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்,'' என்று மலேசிய உணவு வங்கி சங்கத்தின் தலைவர்
முஹமட் அஸ்ருல் முஹமட் ரசாக் என்பவர் குறிப்பிட்டார்.
"இது ஓர் அளவுகோலாகும். டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் அசாதாரண ஞானமாகவும் இது வெளிப்படுகிறது," என்று திரெங்கானு மாநில 4பி மலேசியா இளைஞர் இயக்கத்தின் தலைவரான முஹமட் ஷோயாமில் ஹாஃபிஸ் சாலே என்பவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களும் இன்று அதிகாலை துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு வந்து சேர்ந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)