ஜகார்த்தா, 04 அக்டோபர் (பெர்னாமா) -- அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது நேரலை ஒளிபரப்புச் செயல்பாடுகள் குறித்த முழுமையான தரவுகளை வழங்கத் தவறியதால், நாட்டின் விதிமுறைகளைப் பின்பற்றாத டிக் டாக் நிறுவனத்தின் உரிமத்தை இந்தோனேசியா முடக்கியுள்ளது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் 30-ஆம் தேதிவரை நடைபெற்ற கலவரங்களின் போது டிக் டாக் நேரலை குறித்த முழுமையான தரவுகளின்றி, பகுதியளவு தகவல்களை மட்டுமே வழங்கிய அந்நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்தோனேசியாவின் தொடர்பு மற்றும் இலக்கவியல் விவகார அமைச்சின் இலக்கவியல் கண்காணிப்பு பொது இயக்குநர் அலெக்சண்டர் சபார் தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் மாதப் போராட்டங்களின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டிக் டாக் தனது நேரடி ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
நேரடி ஒளிபரப்பு தளத்தில் இணைய சூதாட்ட உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், போக்குவரத்து தகவல் மற்றும் நேரடி ஒளிபரப்புகளை பணமாக்கும் நடவடிக்கை தொடர்பான தரவை அந்நிறுவனம் வெளியிட மறுத்ததை அடுத்து, உரிமத்தை முடக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கண்காணிப்பு நோக்கங்களுக்காக அமைப்புகள் மற்றும் தரவுகளுக்கான அணுகலை அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் தேவைப்படும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கோரிக்கை என்று அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)