கோலாலம்பூர், 28 செப்டம்பர் (பெர்னாமா) - நேற்று, புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை மரணமடைந்த நிலையில், எழுவர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு லாரி ஓட்டுநர் ஒருவரை இன்று தொடங்கி இரு நாள்களுக்கு போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த லாரியின் உரிமையாளர் உட்பட ஐவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்தும் யூசோஃப் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 வயதுடைய அந்த லாரி ஓட்டுநர், போதைப் பொருள் மற்றும் குற்றவியல் அம்சங்கள் கொண்ட மூன்று குற்றப்பதிவுகளை கொண்டிருப்பதாகவும் 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் விபத்துகளை உட்படுத்திய நான்கு சம்மன்களை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பராமாரிப்புப் பணிகளுக்கு அந்த லாரி உட்படுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரேக் செயலிழப்பு காரணமாக லாரியிலிருந்து வெளியே குதித்துவிட்டதாக சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.
எனினும், உண்மையிலேயே பிரேக் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த அந்த லாரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி நஸ்ரோன் விவரித்தார்.
லாரி, கார் உட்பட இரு SUV ரக வாகனங்கள் என நான்கு வாகனங்களை உட்படுத்தி காலை மணி 10.50 அளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த எழுவர் காஜாங், செர்டாங் மற்றும் கே.பி.கே காஜாங் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு ஒன்றின் கீழ் இவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)