அலோர் ஸ்டார், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று தொடங்கி BUDI 95 எனப்படும் BUDI மடானி ரோன் 95 திட்டத்தின் கீழ், ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர்-ஐ பெறும் பி40 பிரிவினர், ரோன் 95 பெட்ரோலை ஒரு லிட்டர் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
BUDI95 திட்டத்தின் வழி, B40 பிரிவினரின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள அரசாங்கத்திற்கு பொது மக்களில் சிலர் நன்றி தெரிவித்தனர்.
"எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. தற்போது, எத்தனை முறை சென்று திரும்பினாலும் நாள் ஒன்றுக்கு 40 ரிங்கிட் பெட்ரோல் மட்டுமே தேவைப்படுகிறது. என்னுடைய வாகனம் 1.8. அது சிக்கல்தான். தற்போது ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு விற்கப்படுவதால் பாரம் குறைந்துள்ளது," முஹமட் டின் என்பவர் கூறினார்.
அதேவேளையில், அடையாள அட்டையைப் பயன்படுத்தி பெட்ரோலை நிரப்பும் செயல்முறை எளிதாக இருப்பதாக, குறிப்பாக தம்மை போன்ற முதியர்வர்களுக்கு அச்செயல்முறை இலகுவாக உள்ளதாக 61 வயதுடைய சான் பூன் ஷியாங் என்பவர் தெரிவித்தார்.
''இன்று நான் 30 ரிங்கிட்டிற்கு பெட்ரோலை நிரப்பினேன். பளு குறைவாகவே உள்ளது. பெட்ரோன் பணியாளர்கள் நன்கு உதவுகிறார்கள். சரியான வழிமுறைகளை அவர்கள் முன்னமே தயார்படுத்தி வைத்துள்ளனர். நமது அடையாள அட்டையைக் கொடுத்தால் தகுதி பெறுகிறோமா என்று அவர்களே சரிபார்த்துச் சொல்கின்றனர். பிறகு எவ்வளவு நிரப்ப வேண்டும் என்று கேட்கின்றனர். அவ்வளவுதான்,'' என்றார் அவர்.
16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மலேசியர்களும், காலவாதியாகாத ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருந்தால், மாதத்திற்கு 300 லிட்டர் ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு தகுதி பெற்றிருப்பதாக நிதி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)