Ad Banner
Ad Banner
 பொது

அணு ஆயுதங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் - பி.ப.ச

26/09/2025 04:47 PM

கோலாலம்பூர், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- அணு ஆயுதங்கள் போரின் கருவிகள் மட்டுமல்ல.

அவை, கண்மூடித்தனமாக பொதுமக்களைக் கொல்வதோடு சுற்றுச்சூழலின் அழிவிற்கும் காரணமாகின்றன.

உலக மக்கள் வளமான வாழ்க்கை வாழ்வதற்கு, அவற்றை முழுமையாகவும் உடனடியாகவும் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அணு ஆயுதங்கள்  மனிதகுலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ நடத்தப்படும் வெடிப்பு அதிகமான மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

''ஒரு வெடிப்பு என்பது தற்செயலான அல்லது வேண்டுமென்றே - வெகுஜன உயிரிழப்புகள், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மீளமுடியாத காலநிலை விளைவுகளைத் தூண்டும் என்பதை நாம் பார்த்து வருகின்றோம். ஆகவேதான், இந்த நாளில் அணுகுண்டை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன,'' என்றார் அவர்.

1970 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், வரலாற்றில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாகும். 

ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற அணு ஆயுத நாடுகள் ஆயுதக் குறைப்புக்கான தங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றத் தவறி வருவதையும் சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

''191 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இது, அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது (பரவல் தடை), அணு ஆயுதக் குறைப்பை முன்னேற்றுவது மற்றும் அணுசக்தியின் அமைதியான பயன்பாடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய அனைத்துலக ஒப்பந்தமாகும். ஆனால், அந்த ஒப்பந்தத்தை பல நாடுகளால் இன்னும் தொடர முடியவில்லை,'' என்றார் அவர்.

மேலும், அணு ஆயுதங்களின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை ஆபத்தான முறையில் தானியக்கமாக்கக்கூடிய ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் அணு ஆயுத அபாயங்கள் அதிகரிப்பதாக சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

இன்று செப்டம்பர் 26ம் தேதி அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான அனைத்துலக தினம் அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு பெர்னாமா செய்தியாளிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)