கோலாலம்பூர், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று காலை மணி 9 முதல், BUDI MADANI-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், RON95 BUDI மடானி திட்டமான, BUDI95-இன் RON95 பெட்ரோல் உதவித் தொகையை பெறுவதற்கான தங்களின் தகுதியை பொது மக்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
budimadani அகப்பக்கத்தில் மக்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கான தங்களின் தகுதியையும், மாதாந்திர உதவித்தொகை பயன்பாட்டிற்கான மீதத் தொகையையும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று நிதி அமைச்சு சமூக ஊடகத்தில் இன்று பதிவிட்டுள்ளது.
மக்கள் தங்களின் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களைச் சரிபார்த்துக் கொள்வதோடு, ஆரம்ப சரிபார்ப்புக்கு புதிய பதிவு எதுவும் தேவையில்லை என்பது https://www.budimadani.gov.my/ எனும் அகப்பக்கத்தில் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
தகுதியை உறுதிசெய்தப் பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கை முடுக்கிவிட, பெட்ரோல் நிலையத்தில் உள்ள கட்டணத்தைச் செலுத்துவதற்கான இயந்திரத்தில் மைகார்ட் அட்டைகளை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது.
அதன் பின்னர், ரொக்கம், கடன்பற்று அட்டை, வங்கி அட்டை அல்லது மின்னியல் பணப்பை மூலம் பெட்ரோலுக்கான கட்டணத்தைச் செலுத்தலாம்.
நெரிசலைத் தவிர்க்க BUDI 95 திட்டம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவிருப்பதோடு, இராணுவம் மற்றும் போலீஸ் போன்ற சில தரப்பினருக்கு, பொதுமக்களைக் காட்டிலும் முன்கூட்டியே, எரிபொருள் நிரப்புவதற்கான அவகாசம் வழங்கப்படும்.
16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மலேசியர்களும், காலவாதியாகாத ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருந்தால், மாதத்திற்கு 300 லிட்டர் RON 95 பெட்ரோலை வாங்குவதற்கு தகுதி பெற்றிருப்பதாக அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
மேல் விவரங்களுக்கு பொது மக்கள் BUDI MADANI : 1300-88-9595 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)