புத்ராஜெயா, 24 செப்டம்பர் (பெர்னாமா) -- மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் மலேசியர்கள், ரோன்95 புடி மடானி திட்டமான புடி95-இன் ரோன்95 பெட்ரோல் உதவித் தொகையைப் பெற இயலாது.
அக்கால கட்டத்திற்குப் பிறகு புதுப்பிக்கத் தவறிய ஓட்டுநர் உரிமங்கள், நிதி அமைச்சால் தானாகவே தடை செய்யப்பட்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''எனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுப்பிக்கப்படாத எந்தவோர் உரிமமும் செயலற்றதாகக் கருதப்படுகிறது. மேலும், அவர்கள் ரோன்95 உதவித் தொகைக்குத் தகுதி பெற மாட்டார்கள். சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, சாலையில் வாகனம் ஓட்டும் அனைத்து நபர்களும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். அண்மைய ஜே.பி.ஜே பதிவுகளின் அடிப்படையில், மொத்தம் 24 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகியிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது 3 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலாவதியாகிவிட்டது,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் அவ்வாறு கூறினார்.
அந்த எண்ணிக்கையில், ஒரு கோடியே 50 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், காலாவதியான ஒன்பது லட்சத்து 25,421 ஓட்டுநர் உரிமங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாத நிலையில் உள்ளதாகவும் அவர் விவரித்தார்.
புடி95 திட்டத்திற்குத் தகுதி பெற, மூன்று ஆண்டுகளுக்கும் மேற்போகாத காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், அதனைப் புதுப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)